குட்டி கதைத் தொகுப்பு

குட்டி கதைத் தொகுப்புஎனக்குப் பிடித்த தமிழ் குட்டிக் கதைகளை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறேன். இவை நான் எழுதிய கதைகள் அல்ல. நான் படித்த கதைகளில் சிறந்த நீதியோ அல்லது சுவாரசியமான திருப்பமோ அல்லது நகைச்சுவை மிகுந்த கட்டங்களோ இருந்தால் அந்தக் கதை இந்தத் தொகுப்பில் இருக்கும். எனது சொந்த நடையில் மறுபடியும் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் என் தமிழ் எழுத்துப் பயிற்சிக்கும் பெரிதும் உதவின. பல சமயங்களில் சபைகளில் பேசும் போது இந்தக் கதைகள் நான் பேசும் கருத்துக்களை எளிதாக விளங்கச் செய்யும் கருவிகளாகவும் எனக்குப் பயன் பட்டிருக்கின்றன!

"எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!"

குட்டி கதைஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "இவர்களைப் பாரேன்! அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் இவர்களுக்கு பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை" என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலி பேசாது என்று தந்தை கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அன்பிற்கு மொழியும் வடிவமும் கிடையாது

குட்டி கதைஒரு ஊரில் தங்கத்தால் மெல்லிய தாள் செய்து விற்கும் தொழில் செய்து வந்தார் ஒருவர். அவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் அந்தக் குழந்தை அப்பா செய்து வைத்திருந்த தங்கத் தாள் ஒன்றை எடுத்து ஒரு அட்டைப் பெட்டியில் ஒட்டி விட்டாள். அதைப் பார்த்த அப்பாவிற்கு மிகவும் கோபம். குழந்தையை "இப்படிப் பொருளின் மதிப்புத் தெரியாமல் வீணடித்து விட்டாயே" என்று கோபித்துக் கொண்டார்.

மறுநாள் காலை அவர் தூங்கி விழிக்கும் போது அந்தத் தங்கத் தகடு ஒட்டிய பெட்டி அவரது படுக்கை அருகில் இருந்தது. அதன் மேல் குழந்தை அவள் சொந்தக் கையெழுத்தில் பிறந்த நாள் வாழ்த்து எழுதியிருந்தாள். தந்தை அந்தப் பெட்டியை ஆர்வமாகத் திறந்து பார்த்தார். அது காலியாக இருந்தது.

திரும்பவும் அப்பாவிற்குக் கோபம் வந்தது. குழந்தையைக் கூப்பிட்டு "ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று கோபமாகக் கேட்டார். அதற்கு அவள் மழலை மாறாமல்  "அப்பா, நான் அந்தப் பெட்டி நிறைய முத்தம் நிரப்பி வைத்திருந்தேனே. உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டாள். அப்பாவிற்குச் சுரீர் என்று ஏதோ தைத்தது. தன் தவற்றுக்கு வருந்தினார். மகளைக் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார்.

இன்று அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவள் குடும்பம், அவள் குழந்தை என்று கிளம்பிப் போய் விட்டாள். அப்பா இன்னமும் அந்தப் பெட்டியை பத்திரமாக வைத்திருக்கிறார். தினமும் அதைத் திறந்து அதிலிருந்து ஒரே ஒரு முத்தம் மட்டும் எடுத்துக் கொள்கிறார். இன்னமும் அந்தப் பெட்டியில் குறையாமல் முத்தங்கள் இருக்கின்றனவாம்.

இந்தப் 2011 புத்தாண்டில் உங்களுக்கும் இது போல் நெருங்கிய சுற்றத்திடம் இருந்து குறையாத அன்பு கிடைக்கவும் நீங்கள் அப்படிக் கொடுத்து மகிழவும் நல்வாழ்த்துக்கள்!

ஆபத்து! காப்பாற்று !!

குட்டி கதைஆங்கிலேயப் பண்ணையில் ஒரு எலி வாழ்ந்து வந்தது. பண்ணைக்கு சொந்தக்காரனும் அவன் மனைவியும் பண்ணையில் ஒரு கோழியும், பன்றியும், மாடும் வளர்த்தனர்.

எலி செய்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. ஒருவருக்கும் எலி அங்கே இருப்பது பிடிக்கவில்லை. ஒரு நாள் பண்ணைக் காரனும் அவன் மனைவியும் சந்தைக்குப் போய் வரும் போது எதையோ காகிதத்தில் சுற்றி வாங்கி வந்ததை சுவற்றுப் பொந்தில் இருந்து எலி பார்த்தது. அந்தச் சாமான் ஒரு எலிப் பொறி என்று கண்டதும் திடுக்கிட்டுப் போனது.

உடனே கோழியிடம் போய் "என்னைக் கொல்ல எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்" என்று கேட்டது. கோழியோ "இது என் பிரச்சினையே இல்லை. நானா பொறியில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்? உன் பிரச்சினையை உன்னிடமே வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டு தரையைக் கொத்த ஆரம்பித்து விட்டது.

பிறகு எலி பன்றியிடம் போய் முறையிட்டது. பன்றி அதைக் காதிலேயே வாங்கவில்லை. மாட்டிடம் போனால் அதுவும் "போ போ. எனக்கு வேறு வேலை பார்க்க வேண்டும்” என்று துரத்தி விட்டது.

எலியும் வேறு வழி தெரியாமல் தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தன் வாழ்க்கையைத் தொடர்ந்தது.

ஒரு நாள் நடு இரவில் எலிப்பொறி பட்டென்று மூடும் சத்தம் கேட்டது. பண்ணைக்காரன் மனைவி இருட்டில் தடவிக் கொண்டே என்னவென்று பார்க்கப் போனாள். பொறியில் ஒரு பாம்பின் வால் மாட்டிக் கிடந்ததை அறியாமல் பொறியில் கை வைக்கப் போய், அந்தப் பாம்பு அவளைக் கடித்து விட்டது. நச்சின் வீரியம் தாங்காமல் படுத்த படுக்கையாய் கிடந்தாள்.

வைத்தியன் வந்து பார்த்தான். அவளுக்குக் கோழி சூப் வைத்துக் கொடுத்தால் ஒரு வேளை அவளுக்கு நச்சை எதிர்க்கும் சக்தி கூடலாம் என்று யோசனை சொன்னான். பண்ணைக்காரன் அன்றிரவே கோழியை அடித்து சூப் வைத்து மனைவிக்குக் கொடுத்தான்.

நாளுக்கு நாள் மனைவியின் உடல் நலம் குறைந்து கொண்டே போனது. உற்றார் உறவினர் எல்லாம் நலம் விசாரிக்க வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்க ஏதும் இல்லை என்று ஒரு நாள் பன்றியை கசாப்பு போட்டு விட்டான் அந்த பண்ணைக்காரன்.

நோய்க் கொடுமை தாங்க முடியாமல் ஒரு நாள் மனைவி இறந்தே போனாள். அவளுடைய ஈமச் சடங்கிற்காக உற்றம் சுற்றம் எல்லாம் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடக் காசும் தானியமும் கையில் இல்லை. வேறு வழியில்லாமல் பண்ணைக்காரன் மாட்டையும் அடிக்க வேண்டியதாயிற்று.

நீதி: கூட இருப்பவர்களுக்கு ஆபத்து என்றால் அதை அசட்டையாகப் புறம் தள்ளாதே. உனக்கான ஆபத்தும் அதில் ஒளிந்திருக்கக் கூடும்.

உடனே சொர்க்கத்திற்குச் செல் !!

கதைத் தொகுப்புஅக்பரின் நாவிதனுக்கு பீர்பாலைப் பிடிக்காது. அவரை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகத் திரிந்தான். ஒரு நாள் காலை அக்பருக்கு முகச் சவரம் செய்து கொண்டிருந்த போது வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான். "மஹாராஜா, நேற்று என் கனவில் தங்கள் தந்தையார் வந்தார்" என்றான். அக்பரும் உடனே "மேலே சொல். அவர் என்ன சொன்னார்" என்றார்.


நாவிதன் "உங்கள் தந்தைக்கு சொர்க்கத்தில் பொழுதே போகவில்லையாம். பேச்சுத்துணைக்கு அறிவிலும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்கும் ஒருவர் கூட இருந்தால் தேவலாம் என்றார். உங்களை உடனே அனுப்பி வைக்கச் சொன்னார்" என்றான்.


அக்பரும் உடனே சொர்க்கத்திற்குப் போகுமாறு பீர்பாலுக்குக் கட்டளை போட்டு விட்டார். பீர்பால் ஒத்துக் கொண்டு இரண்டு வாரம் தவணை கேட்டார். "அதனாலென்ன.. எடுத்துக் கொள்" என்று பேரரசரும் பெரிய மனதுடன் சம்மதித்தார்.


பீர்பால் வீட்டுக்குப் போய் தன் சவக் குழியை தானே தோண்டினார். யாருக்கும் தெரியாமல், அதிலிருந்து தன் வீட்டுக்குள் செல்ல ஒரு ரகசிய குகையை அமைத்தார். வேலை முடிந்த பின் அக்பரிடம் போய், "அரசே, நான் சொர்க்கத்துக்குப் போகத் தயாராகி விட்டேன். ஆனால் என்னை உயிருடன் புதைத்தால்தான் நான் வேகமாகச் சொர்க்கத்திற்குப் போக முடியும். ஆகவே, எங்கள் குடும்ப வழக்கப் படி என்னைத் தயவு செய்து என் வீட்டிலேயே புதைத்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அவர் கேட்டபடியே அக்பரும் செய்தார்.


திட்டமிட்டபடி பீர்பால், மூடிய சவக் குழியில் இருந்து தப்பித்து வீட்டுக்குள் வந்து விட்டார். யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே மறைந்து சுமார் ஆறு மாதம் வாழ்ந்தார். நீண்ட தாடியும் சடை முடியும் வளர்த்தார்.. பிறகு ஒரு நாள் திடும் என்று அரசவையில் அக்பர் முன்னால் போய் நின்றார்.


அக்பர் வியப்புடன் "பீர்பால், எப்படி நீ திரும்பி வந்தாய்" என்று கேட்டார். அதற்கு "அரசே, தங்கள் தந்தையார் என்னுடன் கழித்த ஆறு மாதம் மிகவும் மகிழ்ச்சியாகப் போனதால் எனக்கு ஊருக்குத் திரும்பிச் செல்ல வரம் கொடுத்தார். உங்களை மிகவும் விசாரித்தார்" என்றார் பீர்பால். "அப்பா நலமாக இருக்கிறாரா?" என்று ஆவலுடன் சக்ரவர்த்தி வினவினார். பீர்பால் அதற்குத் தன் தாடியையும் சடை முடியையும் தடவிக் கொண்டே "மன்னா , அவர் நலமாகத்தான் இருக்கிறார். ஆனால் நாவிதர்கள் யாரும் சொர்க்கத்திற்குப் போவதில்லை போலும். அதனால் சரியாகச் சவரம் செய்து கொள்ள இயலாமல் என்னைப் போலவே அவரும் சடை முடியுடன் பரிதாபமாகத் தோற்றமளிக்கிறார். இதற்கு நீங்கள் ஏதாவது உடனே ஆவன செய்ய வேண்டும். நம் அரண்மணை நாவிதன் உத்தமன். அவனை அனுப்பினால் நேரே சொர்க்கத்திற்குத்தான் போவான். காரியம் ஆகிவிடும்" என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

குட்டி கதை ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

'இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்' என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் 'சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்' என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

என் அடிமைகளுக்கு நீ அடிமை

குட்டி கதைமாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும் படி ஆணையிட்டான்.

முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப் படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.

முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து "கொல்ல வரும் ஆளைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா?" என்று கேட்டான்.

அதற்கு முனிவர் "மன்னா.. நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும் போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!" என்றார்.

அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. "நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக் முடியும்?" என்று முனிவரிடம் கேட்டான். அவர் "அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன்" என்றார்.

மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.

எலியும் பாலும் - ரஷிய குட்டிக் கதை

குட்டிக் கதைபசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

ஏமாந்த சிறுத்தை - கிழக்கு ஆப்பிரிக்க குட்டி கதை

குட்டி கதைஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

தருணத்தின் முக்கியம் அறிந்து முடிவை விரைவாக எடுக்க வேண்டியது அவசியம்.

கடைசி வீடு

குட்டி கதைஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் காலி மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். தன் தொழிலுக்கு உதவியாக ஒரு கொத்தனாரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்தக் கொத்தனார் மிகவும் நேர்த்தியான, அழகான வீடுகளைக் கட்டுவதில் திறமைசாலி. அவர் கட்டும் வீடுகள் உடனே நல்ல விலைக்குப் போயின. பலரும் காத்திருந்து வாங்கினார்கள்.

வியாபாரம் கொழித்தது. தனவந்தரும் கொத்தனாரை நல்ல சம்பளம் கொடுத்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். கொத்தனாருக்கு வயது நிரம்பவும், தான் ஓய்வு பெற்றால் நல்லது என்று நினைத்தார். தனவந்தரிடம் அந்த யோசனையைச் சொன்ன போது அவருக்கும் அது சரியென்றே பட்டது. ஆனாலும் அவர் கொத்தனாரைப் பார்த்து 'தம்பி, நீ எவ்வளவோ செய்து விட்டாய். உனக்கு வாழ்க்கையில் ஓய்வு தேவைதான். எனக்காக இறுதியாக ஒரு வீடு கட்டிக் கொடுத்து விட்டுப் போ" என்று கேட்டுக் கொண்டார்.

கொத்தனாருக்கு தனவந்தர் மேலும் வேலை சொன்னது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஓய்வு கேட்டால் வேலை சொல்கிறாரே என்று கோபப் பட்டார். ஆனாலும் பல நாளாக தன்னைப் பார்த்துக் கொண்ட மனிதரிடம் கொண்ட நன்றியறிதலால் ஒன்றும் பேசவில்லை.

வேண்டா வெறுப்பாக அந்தக் கடைசி வீட்டைக் கட்டினார். வழக்கமாக இருக்கும் தரம் அதில் இல்லை. காமா சோமாவென்று இருந்தது.

கட்டி முடித்த அன்று தனவந்தர் வந்தார். வீட்டின் சாவியைக் கொத்தனாரிடம் ஒப்படைத்து, "அப்பா, இந்த வீட்டையே உனக்காகத்தான் கட்டினேன். உன் ஓய்வு காலத்திற்கு இது உதவும். வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

கொத்தனாருக்குத் திடுக்கென்று இருந்தது. நமக்கு என்று தெரிந்திருந்தால் இன்னமும் கவனம் எடுத்து சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று வெகுநேரம் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.

நாமும் நமது இளம் வயதில் நம் யோசனைத் தெரிவுகளாலும் செய்கைத் தெரிவுகளாலும் நமது எதிர்காலம் என்ற வீட்டைக் கட்டுகிறோம். அதில்தான் வாழப் போகிறோம் என்று யோசித்துச் செய்பவர்கள் எப்போதுமே சிறப்பாக வாழ்கிறார்கள்.

சிஙகமும் பங்கும் - ஆப்பிரிக்கக் குட்டிக் கதை

குட்டிக் கதைசிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக்
கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்".அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" - கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்".

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: "பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?"


"மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

சொர்க்கமும் நரகமும்

குட்டி கதைஒரு நாள் ஒரு ஜென் துறவியிடம் ஒரு சாமுராய் வீரர் வந்தார். ஜென் துறவி அமைதியாக அமர்ந்திருந்தார். சாமுராய் வீரர் துறவியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் என்று சொன்னார். துறவி புன்னகையுடன் தலையசைத்தார். சாமுராய் வீரர் "ஐயா எனக்கு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் வித்தியாசம் தெரியப் படுத்துங்கள்" என்றார்.

துறவி பதிலேதும் சொல்லாமல் புன்சிரித்துக் கொண்டிருந்தார். சாமுராய்க்கு தலைக்கு மேல் கோபம் வந்து விட்டது. தனது சாமுராய் வாளை உறுவிக்கொண்டு "உன்னை மதித்துக் கேள்வி கேட்பவனை அவமதிப்பாயா?" என்று உறுமினார். துறவி புன்னகை மாறாமல் "இப்போது நீர் நரகத்தில் இருக்கிறீர்" என்றார்.

இதைக் கேட்ட சாமுராய் சற்றே தெளிவு பெற்றவராய் உடனே பின் வாங்கினார். துறவியைப் பணிந்து வணங்கி "ஐயா, அறியாமல் செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள்" என்று சொன்னார். இப்போதும் அதே புன்னகையுடன் துறவி சொன்னார் "நீர் இப்போது சொர்க்கத்து வந்து விட்டீர்".

தாய்மையின் சக்தி

குட்டி கதைஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.

ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள்.

சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.

இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர்.

அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் "நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?" என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி "இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்" என்று பதில் சொன்னாள்.

பழக்கத்திற்கு அடிமை ஆகாதே! - ஐரோப்பிய குட்டி கதை

குட்டி கதைஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.
செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.